Monday, November 15, 2010

தேவையா இந்த வெட்டிவிவாதம்...?


தற்செயலாக சில பதிவர்களின் பதிவுகளை பார்க்கநேரிட்டது, அதில் வந்துள்ள சில பின்னூட்டங்களும் அதற்கு விளக்கங்களும் வந்ததைப்பார்த்து, எனக்குள் எழுந்த சில ஐயப்பாடுகளின்  வெளிப்பாடே இந்த பதிவு. 

இந்தியாவிற்கு என்று பண்பாடு, கலாசாரம் மற்றும் அதை சார்ந்து  சில சட்ட திட்டங்கள் உள்ளன .இந்தியாவை இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்வதாக நினைத்து, நம் பண்பாட்டின் உள்ளார்ந்த கருத்தை உணராமல்  அறிவாளிகள் சிலர் பேசுவது நம்மை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டுசெல்லும் என்பதை உணராமல் அவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது .    
       
வரலாற்றை புரட்டி பார்த்தால் ஆதி காலத்தில் மனிதன் காடுகளில் காட்டுமிராண்டித் தனமாக தன் விருப்பம்  போல் வாழ்ந்தான். (LIVING TOGETHER)  அப்படி வாழ்ந்த மனிதன் பின்னர் தனக்கென்று ஒரு கட்டுகோப்பான வாழ்க்கை வாழ தெரிவு  செய்தான். அந்த மாதிரியான வாழ்க்கை அவனுக்கு பிடித்துவிடவே அது நாளடைவில் குடும்பம் ஆக வளர்சியடைந்தது. குடும்பம்  என்று வந்தவுடன் கணவன், மனைவி , பிள்ளைகள் , அப்பா, அம்மா, உற்றார்  உறவினர்கள் சொந்த பந்தம் என்று ஒரு உறவு முறைகளை ஏற்படுத்தி  கொண்டு ஒரு சமூதாயமாக வாழ தொடங்கினான் . அது அவனுக்கு பாதுகாப்பை கொடுத்தது. அப்போது தனக்காக மட்டும் வாழாமல் தன்னை சார்ந்தவர்களுகாகவும் வாழ தொடங்கினான். அப்போது அவன் தன்னுடைய  சில விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்ய வேண்டி வந்தது. ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழ ஆரம்பித்தனர். சிலவற்றில் விட்டு கொடுத்தும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். சந்ததி வளர தொடங்கியது .....குடும்ப எண்ணிக்கை கூடியது.... தன் குடும்பதிற்காக  வாழ ஆரம்பித்தான் .அங்கே அவனுக்கு பாதுகாப்பு கிடைத்தது .

"living together "  கலாச்சாரம் என்பது ஒரு குறுகிய வட்டத்தை மட்டுமே குறிக்கும். ஒருவரின் உடல் தேவை அல்லது உணர்வு சம்பந்தப்பட்டதாகவே   தோன்றுகிறது .உடல்பசி அல்லது இச்சை முடிந்துடன், "பூ விட்டு பூ தாவும் வண்டு போல்" வேறு ஒரு துணையை தேடுவது   போன்றதுதான் இந்த கலாச்சாரம் . அங்கே வளர்ச்சிக்கு இடம் இல்லை மீண்டும் இது நம்மை  கற்கால காட்டு மிராண்டி தனமான வாழ்க்கை சூழலுக்கே எடுத்து செல்லும் ஒரு அபாயமான ஆபத்தான கலாச்சாரம் என்றே எனக்கு தோன்றுகிறது.  உலகம் ஏதோ ஒரு விதியின் கீழ் அழகாய் இயங்குகிறது. அந்த ஒரு விதி என்பது தான்  இங்கே வாழ்க்கை சக்கரத்திற்கு அச்சாணி, அந்த அச்சாணி சரியான விதத்தில் பொருந்தி இருந்தால் தான் வாழ்க்கை சக்கரம் நல்ல முறையில் செல்லும். அச்சாணி இல்லாத சக்கரம் தன் இலக்கை அடைந்ததாக சரித்திரமே இல்லை. தனக்கென்று வாழ்வதை விட தன்னை  சார்ந்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவே  இருக்கும்.  தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கை இருந்தால் நமக்கு இத்தனை அறிவியல் வளர்ச்சி, இத்தகைய மாற்றங்கள் வந்திருக்காது.

நாம் வாழ்வது ஒருமுறைதான் அந்த வாழ்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று சில வரைமுறைகளோடு சில குறிக்கோளோடு தன் வாழ்கையை அர்த்தமுள்ளதாக வாழ்கிறான். நாம் என்பது ஒரு விசாலமான பார்வை, தன்னுடைய என்பது குறுகிய வாழ்க்கை. அது கடிவாளம் இடாத குதிரையில் சவாரி செய்வது போன்றது. கடிவாளம் இல்லாத குதிரை சரியான இடத்தை சென்றடைவது முடியாத காரியம் . தன்னுடைய உடலில் ரத்தம் சீராக ஓடும் வரையில் எல்லாம் சுவையாகத்தான் இருக்கும், உடல் முதிர்ந்து சோர்ந்து போன நிலையில். ஆதரவிற்கு அங்கே நாம் காண்பது வெற்றிடம் மட்டுமே. அது  .அவனை   தற்கொலையில் கொண்டு போய் விட்டுவிடும் .அவன் வாழ்கையை சுயமாகவே  முடிக்கின்ற சூழல் ஏற்படும் இது உறுதி.       

living together  என்பது ஒருவருடைய சுய விருப்பு வெறுப்பு மட்டுமே சார்ந்தது. இந்த முறையில் வாழ்ந்த ஒரு பெண்ணை மனைவியாக ஏற்று கொள்ள உங்கள் மனம் ஒத்துகொள்ளுமா ....?  அந்த முறையில் வாழ உங்கள் மகனையோ, மகளையோ அனுமதிப்பீர்களா....? மனம் ஒரு குரங்கு ....மனநிலை மாறுகின்ற சூழ்நிலையில் அடிக்கடி  உங்கள்  மகனையோ மகளையோ ஜோடிகளை மாற்றி கொள்ள அனுமதிப்பீர்களா.....?? வேடிக்கையாக எங்கோ கேட்ட ஞாபகம் (உன் குழந்தையும் என் குழந்தையும் இப்போது நம் குழந்தையுடன் விளையாடுகிறது) 

ஒரு முறை ஜோடி மாறினாலே இந்த வேடிக்கை அதுவே பலமுறை ஜோடிகளை  மாற்றினால் எப்படி இருக்கும்...?? சிந்தித்து பாருங்கள்.......அவர்களின் குழந்தைகளை எப்படி , யாருடைய மகன் , மகள் என்று அழைப்பது...?? முக்கியமா யார்  இன்சியலை போடுவாங்க....? இது நாம பழைய படி கற்கால வாழ்க்கைக்கு போவது போல் இருக்கிறது....இஷ்டம்போல் வாழும் மிருக ஜீவன்களுக்கும் நமக்கும் என்ன  வித்தியாசம்....இந்த முறையை ஆதரித்து வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது அவர்கள் தங்களது ஆறாவது அறிவை பயன்படுத்துகிறார்களா? என்று சந்தேகம் வருகிறது

living together ....என்ற கலாசாரம் இப்போது அதிகம் பேசப்படுவது நம் நாட்டில்  அதிகம் படித்த ஆனால் தற்போது மேலை நாடுகளில் வசிக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே காண்பதாக எண்ணுகிறேன் .   ஒரு பெண்ணோ ஆணோ தன்  தேவைக்கு அதிகமாக பொருள் சேர்க்கும் போது, உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இது போன்ற சீர்கேடுகளை  விரும்ப தொடங்குவார்கள் என்று நினைகிறேன் . அங்கே பொருளாதாரரீதியில் தன்னிறைவு   அடைந்ததாக நினைப்பது,எதையும் துணிந்து எதிர்கொள்ளும் மனோநிலை, சமூக பாதுகாப்பை பற்றி கவலைபடாத ஒரு நிலை வந்த பின்னால் (எதற்கும் துணிந்தவர்களை, எதிர்காலத்தை பற்றி சிந்திக்காதாவர்களை) அவர்களை பற்றி பேசுவது வீண் .        

மாற்றங்கள் தேவை தான், அது மற்றவர்களை பாதிக்காத வரை...நம் கலாசாரத்தில் குறைபாடுகள் இருக்கலாம் அதை சரி செய்வதற்கு நல்ல வழிசொன்னால் நன்றாக இருக்கும் அதை விட்டுவிட்டு தலை வழி போய் திருகு வழி வந்த கதை ஆகிவிட கூடாது ...........????

மனிதனுக்கு மகிழ்ச்சியிலே சிறந்த மகிழ்ச்சி எது என்றால் ஒன்றை பெறுவதை விட விட்டுகொடுப்பதில் தான் இருக்கிறது. (தனிப்பட்ட விருப்பு வெறுப்பு) குடும்பம் என்ற நம் பந்தத்தோடு விட்டு கொடுத்து அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டு பிற்கால சந்ததிகள் நன்றாக வாழ நாம் வழிகாட்டியாக இருப்போம். 

இப்படி ஒரு பதிவை போடுவதால் நானொன்றும் கலாச்சார தூதுவனோ , பாதுகாவலனோ   இல்லை, ஒரு சாதாரண இணையதள வாசகன் மட்டுமே .
    

Wednesday, September 22, 2010

எங்கே செல்கிறது இந்தியா..??!


காலையில் தினசரிகளைத்திறந்து பார்த்தால் சாதிக்கலவரம் , மத கலவரம், இனக்கலவரம், தீவிரவாதம் , நக்சலைட் போராட்டம் என்று எங்கும் ஒரே இரத்த வாடைகள் தான் அடிக்கிறது.

ஒன்றுபட்ட இந்தியாவின் பகுதிகளான காஷ்மீரில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. பல ஆண்டுகளாக அரசு எவ்வளவு தீவிர முயற்சி எடுத்தும் இன்னும் அங்கு அமைதியை நிலைநாட்ட முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறது. காரணம் அங்கு செயல் படுத்தப்படும் நமது அரசின் செயல்பாடுகளில் உள்ள கையாலாகாதனம் தான்.

ஜார்கண்டில் தினம் தினம் இனக்கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு நிலையான மாநில அரசு அங்கு நிருவபடாமல் அதிகார வர்க்கம் சடுகுடு ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது ....பாவம் மக்கள்.  

குஜராத்தில் மதக்கலவரம் கலங்கடிக்கிறது. அரசு  என் மதம் பெரிசு உன் மதம் பெரிசு என்று இன்று வரை மதத்தின் பின்னால் மதம் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. நிதம் மதத்தின் பெயரால் படுகொலைகள் அரங்கேறுகின்றன. ரயில் கவிழ்ப்பு, பயணம் செய்யும் அப்பாவி பயணிகளை நித்திரையிலேயே பரலோகம் அனுப்புகின்றனர் .

கொல்கத்தா, ஆந்திரத்தில் நக்சல்களின் போராட்டம் இன்றும் ஓயவில்லை, எங்கும் மரணவோலம் இன்று யாரை கடத்துவர்களோ , என்று அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கையை பிசைந்து கொண்டிருக்கும் ஒரு நிலை.

மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனை போல இன்னும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகளை நமது இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது ...இது  மாநில அரசின் கடமை என்று கைகாட்டி வேடிக்கை பார்கிறது.  நம்மை  அன்றைய ஆங்கிலேயர்கள்  'Divide and Rule ' என்று கொள்கையில் ஒற்றுமையின்மையை விதைத்து  நம்மை அரசாட்சி செய்தனர். நம் மத்திய அரசும் இதைத்தான் இப்போது செயல் படுத்துவதாகவே  தோன்றுகிறது.

மாநிலத்திற்கு சுயாட்சி தேவை தான் எவற்றில் சுயாட்சி தேவை என்பதையும் ஒரு வரைமுறைபடுத்த வேண்டும். தீவிரவாதத்தையும் , மத கலவரத்தையும் ஒடுக்குவதிலேயே ஒரு தெளிவான கோட்பாடு வேண்டும் முடிந்தால் ராணுவம் போன்ற ஒரு அமைப்பை இந்திய முழுவதும் சுயமாக யாருடைய தூண்டுதலும் இடர்பாடுகளும் இன்றி செயல்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கி இந்திய தேசத்தை  அந்நிய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற  முயற்சி மேற்கொள்ளலாம்.

பாப்ரி மசூதி - அயோத்தியா வழக்கில்  செப்டம்பர் 24 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது..

தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அமைதி காப்போம் !!


மதம் இதமாக இருக்கட்டும்,
சாதிகள் சம்பிரதாயமாக இருக்கட்டும் !


சாதிக்கு சாதி மணம் உண்டு,
மதம் அனைத்திலும் அன்பு உண்டு !


அனைவரும் ஏற்ப்போம், 
அலகாபாத் தீர்ப்பை !!


நாம்  இந்தியர் ! நமது தேசம் இந்தியா !! இதில் உறுதி கொள்வோம் !!!


Thursday, September 2, 2010

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நண்பர்களுக்கு வணக்கம்.

என் பதிவுகள் அனைத்தும் தவறுதலாக அழிந்துவிட்டது...அதனால் என் பதிவுகளை தொடர்ந்து எழுத  முடியாமல் போய்விட்டது.

நண்பர் LK  அவர்களின் உதவியால் என் பதிவுகளை இன்று மீட்டெடுத்து பதிவிட்டிருக்கிறேன்.  நண்பருக்கு நன்றி.

இனி தொடர்ந்து என் பதிவுகள் வரும், தொடர்ந்து உங்கள் நல்லாதரவை எதிர்ப்பார்கிறேன்.
சிரமத்திற்கு பொறுத்து கொள்ளவும்.

நட்புடனும் அன்புடனும்,

உங்கள் நண்பன்.**************

உன்னில் நான்

    
    
        மனம்  நிறைய பாரத்தால்

    நடந்தேன் கால்கள் கடுக்க
    எங்கே சென்றேன் தெரியவில்லை
    என் மனக்கதவை திறந்தேன்
    மனதில் நிறைவாய் 
    நீ இருந்தாய் அழகாய்
    இத்தனை நாளாய் எங்கிருந்தேன்
    ஓர் உயிராய் உன்னில் நான்
    விழித்தேன் கண்களில் நீர் ஆறாய்
    அன்பான கவனிப்பால் தாயானாய்
    எதார்த்தத்தை கற்பித்ததால் குருவானாய்
    உள்ளத்தை பகிர்ந்ததால் தோழியானாய்
    உணர்வினுள்  நனைந்ததால் மனைவியனாய்  
    தவறுகளை  தண்டித்ததால்  தந்தையானாய் 
    என் இதயத்தை திருடியதால்  காதலியுமானாய்
    சற்றே நிமிர்ந்தேன் 
    என்னுள் நீ தேவதையாய்          

அன்பு


             
       அன்பு சாந்தமும் , தயவும் உள்ளது.
       அன்பு தன்னைத்தானே புகழுவது  இல்லை
       அன்பு பொறாமை கொள்ளாது
       அன்பு கோபம் அடையாது
       அன்பு கெட்டதை நாடாது

       யாருக்கும் தீங்கு நினையாது
       அநியாயத்தில் மகிழ்ச்சி அடையாது
       சத்தியத்தில் களி கூறும்.
       அனைத்தையும் நம்பும், எதையும்
       பொறுத்து கொள்ளும், சகிக்கும்.

       அறிவே குறைந்து போனாலும்
       அன்பு ஒருபோதும் ஒழியாது.
       இருக்கும் அனைத்தையும் தானம்
       செய்தாலும் என்னிடம் அன்பு இல்லாவிடில்
       பிரயோசனம் ஒன்றும் இல்லை.

       அன்பு நிறைவாய் வரும் போது,
       துர்குணங்கள் குறைந்து  போகும்!

நினைவுகள் தொடருகிறது.....அன்று முழுவதும் என் நண்பன் பள்ளிக்கு வரவில்லை. மாலை பள்ளி முடிந்ததும், நேராக அவனது வீட்டுக்கு  சென்று பார்த்தேன். வீட்டில் அவனும் அவன்  அம்மாவும் இருந்தார்கள் . மெதுவாக  அவனிடம் சென்று பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டேன்,  அவன் உடனே அழ தொடங்கினான். பதில் ஏதும் சொல்லவில்லை 

அவனது அம்மா பேச தொடங்கினார்கள், " நேற்று மாலை வீட்டுக்கு வந்த உடன் அவனது அப்பா வீட்டு பாடத்தை  எழுதுவதற்கு நோட்டு புக்கை  எடுத்து வர சொன்னார்கள்  , அதை எடுத்த போது  அதனுடன் ஆசிரியரின் கண்ணாடியும் கீழே விழுந்தது. அதை பார்த்த அவனது அப்பா ' இது யாருது ' என்று கேட்டார். அதற்கு அவன் பயத்துடனும் இது தனது தமிழ் ஆசிரியருடையது என்றும் அதற்கு பின்னர் வகுப்பில் நடந்தவற்றையும்  சொல்லி இருக்கிறான் , அதை கேட்ட அவனது அப்பா அவனை அடித்தும், திட்டியும் இருக்கிறார். 

இந்த வயதிலேயே அதுவும் பாடம்  சொல்லித்தரும் ஆசிரியரிடமே திருட தொடங்கி விட்டாயே என்று  கோபத்தில் கத்தி, அவனை தனது சைக்கிளில் ஏற்றி கொண்டு அந்த இரவு நேரத்தில் ஆசிரியர் வீட்டுக்கு சென்றார். தனது தவறை ஒப்புகொள்ள செய்து அவரது கண்ணாடியையும் திருப்பி கொடுத்துவிட செய்தார். அப்பாவிடம் வாங்கிய அடியும், தன்னுடைய குற்ற உணர்வும் அவனை இரவு முழுவதும் புலம்ப செய்தது. இதனால் காய்ச்சல் வந்து பள்ளிக்கு வரவில்லை " என்று கூறி முடித்தார்கள்.

அந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், முக்கியமாக மாணவன் செய்த தவறுக்கு தனக்கு தண்டனை கொடுத்த அந்த ஆசிரியர் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். அதற்கு பின்னர் கூடிய அளவிற்கு யாரும் தவறு செய்யாமல் இருந்து கொண்டோம், அப்படியும் சிலர் செய்த தவறுகளையும்  நாங்கள்  காட்டி கொடுத்து விடுவோம். 
  
( பி.கு ) அந்த கண்ணாடியை எடுத்த என் நண்பன் இப்போது காவல் துறையில் பணிபுரிகிறார் !!

**************************************************************************************
'வெற்றி என்பது வேறு எங்கும் இல்லை, தோல்வியில்தான்'

தோல்வியே வெற்றியின் தாரக மந்திரம்.தோல்வியினால் வெறுப்படைந்தால் வாழ்கையில் முன்னேற முடியாது. எனவே தோல்வியை வெற்றியாக்குவதர்க்கு  என்ன வழி உண்டு என்பதை ஆராய்ந்து அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம்.

தோல்வி வந்து விட்டதே என்று துக்கபடுவதால் ஒரு பிரயோசனமும்  இல்லை. இன்று நாம் வெற்றி பெற்றவர்களாக போற்றப்படும் ஒவ்வொரு சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும்  ஆராய்ந்து பார்த்தால் பல முறை தோற்றவர்களாகவே காணபடுவர். தோல்வி பெற்ற ஒருத்தரால் மட்டுமே முழுமையான வெற்றியை பெற  முடியும்.

எனவே தோல்வியை நேசியுங்கள். வெற்றியும் தோல்வியும் ஒன்று போல் எடுத்துக்கொண்டால்  மட்டுமே வாழ்க்கையை ரசிக்க முடியும். துக்கம், பொறாமை , தோல்வி,  வேதனை, பழிவாங்குதல் அனைத்தையும் நம்  மனதில் இருந்து அகற்றிவிடுங்கள். அப்போது மனதில் தூய  வெளிச்சம் உண்டாகும்.

எப்போதும் எதிரிகளை நேசிக்க கற்றுகொள்ளுங்கள் அவர்கள்தான் நாம் முன்னேறுவதற்கு வழிகாட்டிகள். மகிழ்ச்சியும், புன்னகை புரியும் முகம்  மட்டுமே எதிரியை வீழ்த்தும் சிறந்த ஆயுதங்கள் . உங்களுடன் பணியாற்றும் சக தோழர்களை நேசியுங்கள் அவர்களை மனிதர்களாக மதியுங்கள் , தங்களை சுற்றி சந்தோசம் என்னும்  கோட்டையை கட்டுங்கள், யாராலும் அதை வீழ்த்த முடியாது.                              

தோல்வியை எதிர் கொள்ள நம்மிடம் இருக்க வேண்டியது தன்னம்பிக்கை.  என் வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொள்ள இந்த தன்னம்பிக்கை மட்டுமே எனக்கு கை கொடுத்தது , இன்றும் கை கொடுத்து கொண்டு இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வாசகங்களும் என்னை  மீண்டும் புதுபித்து கொள்ளவே.....இவை மறுபடியும் எனக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதை உணரமுடிகிறது.... இவை வெறும் வாசகங்கள் அல்ல , மனதை ஒழுங்கு படுத்தும் மந்திரங்கள்.  

மனம் ஒழுங்கற்று  இருப்பதால் தான் சிறு தோல்வி கூட பெரிய அளவில் மனதை பாதிக்கிறது.....எனவே " கவலைகளையும், தோல்விகளையும் ஒரு சிறு பையில் போட்டு வைத்து விடுங்கள், முக்கியமாக அந்த பையின் அடியில் ஓட்டை இருக்கட்டும் "
அன்புடன் மீண்டும் சந்திப்போம்......., சிந்திப்போம்.....

மலரும் நினைவுகள்எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் என்ற நகரம்.
எங்கள் ஊரில் மிகவும் பிரசித்திபெற்ற பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரியும், சிவனும் ஒன்றே என்று உலகுக்கு காட்டியதாக சொல்லப்படும் கோயில் உள்ளது. ஆங்கிலயருக்கு எதிராக முதன்முதலாக போராட்டத்திற்கு குரல்கொடுத்த  பூலித்தேவன் பிறந்த நெற்கட்டும் செவல் என்ற ஊர் அருகில் தான் உள்ளது.  இன்னும் பல சிறப்புகள் கொண்டது தான். இங்கு ஆடி தபசு என்ற திருவிழா மிகவும் விமர்சையாக இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  

வீட்டில் இருந்து சுமார் மூன்று   கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்வோம். சில சமயங்களில் அண்ணனின் கருணையால்  சைக்கிள் கிடைக்கும் அப்போதெல்லாம் பள்ளி பருவ நண்பனை பின்னால் ஏற்றிக்கொண்டு    மகிழ்ச்சியோடு செல்வேன் .   மனதில் எந்த சலனமும் இல்லாத அந்த பருவத்தில் நடந்த, என்னை பாதித்த ஒரு நிகழ்ச்சி ...........

அப்போது எட்டாம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். எங்கள்  தமிழாசிரியர் பாடம் நடத்தும் விதம்  எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.   வழக்கம் போலவே தமிழாசிரியர்
திரு.கோவிந்தன் அவர்களின் கலகலப்பான போதனைகள் நிறைந்த வகுப்பு நடந்துகொண்டு இருந்தது (அவர் எங்களுக்கு பாடம்  நடத்தும் விதம, எப்போது தமிழ் வகுப்பு வரும் என்று எங்கள் எல்லாருக்கும்   ஒரு எதிர் பார்ப்பு இருக்கும் )    பாடம் நடத்திகொண்டிருக்கும்  நேரத்தில் தலைமையாசிரியர் அழைத்ததாக  பியூன் அண்ணன் தமிழ் ஆசிரியரிடம் தகவல் கூறி சென்றார்.  
                            
தமிழாசிரியரும் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி மேசை  மீது வைத்துவிட்டு தலைமையாசிரியரை பார்க்க  சென்றார். அந்த நேரத்தில் என் வகுப்பு சக நண்பன் ஒருவன் அவரது மூக்கு கண்ணாடியை எடுத்து ஒழித்து  வைத்துவிட்டான்.

சிறிதுநேரத்தில் தமிழாசிரியர் வந்து பாடம்  நடத்த ஆரம்பித்தார். பலகையில் ஏதோ  எழுதுவதற்காக தனது மூக்கு கண்ணாடியை தேடினார்,கண்ணாடி அங்கு இல்லை...  கண்ணாடியை மாணவர்களில் யாராவதுதான் எடுத்திருக்கவேண்டும் என்று நினைத்து   வகுப்பில் உள்ள அனைவரையும் எழுந்து நிற்க  செய்து, இன்னும்  ஐந்து  நிமிடங்களில் எடுத்தவர்கள் கொடுத்துவிடுங்கள் இல்லை என்றால் தக்க தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார். சக நண்பனை யாரும் காட்டிகொடுக்க முன்வரவில்லை .அவனும் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை.
      
  சிறிது நேரத்தில் தமிழாசிரியர் மூங்கில் பிரம்பை கையில் எடுத்து தன்னுடைய   இன்னொரு  கையில் ஓங்கி அடித்து தனக்கு தானே தன்டனை கொடுத்துகொண்டார் . அப்போதும் அந்த குறும்புகார தோழன் உண்மையை சொல்லவில்லை, கண்ணாடியை மறைத்தே விட்டான்............. 

மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றேன். நேரம் கரைந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த மாணவனை மட்டும் காணவில்லை ................... ?!

பள்ளி பருவ  நினைவுகள் தொடரும்... 

வெல்லட்டும் மானுடம்...!


   உங்களை பகைக்கிற
   எதிரிகளை நேசியுங்கள்...!
   உங்களை சபிக்கிறவர்களை
   நீங்கள் வாழ்த்துங்கள்...! 
   துன்பப்படுத்துபவர்களுக்காக 
   பிராத்தனை செய்யுங்கள்...!
   நண்பர்களை மட்டுமே 
   நீங்கள் நேசிப்பதால் 
   மேன்மை என்ன...?!
   வெறுப்பவர்களையும் 
   நட்பால்.... 
   அணைத்து கொள்ளுங்கள்!
   இவன் என் நண்பன் என்றே 
   பலரும் சொல்ல...
   இங்கே மறைந்தே 
   போனது.... பகையுணர்ச்சி...!!
   வெல்லட்டும் இந்த மானுடம்...!!  


அன்பால் உலகை வெல்வோம்ஒரு சாதாரண  எழுத்தாளனாக முயற்சிக்கும்  எனக்கு,  எனது முதல் பதிவிற்கு தோழர், தோழிகள் அமோக ஆதரவையும், வாழ்த்துக்களையும் ஒரு சேர தெரிவித்து இருந்தீர்கள்.  உங்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் உண்மையில் என்னை விரைவில்  ஒரு எழுத்தாளனாக ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

அன்பு மிக வலிமையான ஆயுதம். அன்பினால் நாம் எதையம் சாதிக்கமுடிய்ம்... தீமையை  வெல்லக்கூடிய மிக கூர்மையான ஆயுதம் அன்பு ஒன்றே...  ஒருவரின்  பகையை, பகையால் வெல்வது தற்காலிக வெற்றியாகத்தான்  இருக்கும்... "பகைமை" ஒரு முடிவில்லா தொடர்கதை...!?   ஒருவர் மீது  ஒருவர் கொண்டிக்கும் மாயமற்ற அன்பினால் உலகை வெல்ல முடியும். 

இந்நூற்றாண்டில்    அன்பினால் உலகத்தை வென்ற தெய்வ பெண்மணி அன்னை தெரசா அம்மையார் அவர்கள்.  அவர்களை  நாம் நம்முடைய வாழ்வில் உதாரணமாக  எடுப்போம்.  அன்பால் உலகை வெல்வோம்...!  "அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் நடப்பட்ட  மரம் போன்றது "

"பல்லுக்கு பல்"       "கண்ணுக்கு கண்"   "அடிக்கு அடி"        "உயிருக்கு உயிர்" என்று இருந்தவர்களின் குடும்பம், நாடு, இப்போது தீண்டத்தகாத  குடும்பமாகவும், தீவிரவாத  நாடாகவும், நிச்சயமற்ற வாழ்க்கையும் தான் அங்கே இருக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்...!!?  

வாழ்கின்ற  சிறிது காலத்தில் நாம் நம் குடும்ப்பத்தை நேசிப்போம்...,  குடும்ப உறவை நேசிப்போம்..., ஊரை நேசிப்போம்..., நாட்டை  நேசிப்போம்..., அன்பினால் உலகை  நேசிப்போம்...!! 

அன்பே சக்தி..
அன்பே தைரியம்..
அன்பே சுகந்தம்..
அன்பே சாந்தம்..
அன்பே ஆரோக்கியம்..
அன்பே  கடவுள்..  
அன்பே  சிவம்.. 
அன்பே இறைவன்.. 
அன்பே யாவும்......!! 

 அனைத்து மதமும்,அனைத்து புனித மத நூல்களும்  போதிக்கும் கருப்பொருள்   ஒன்றே  ஒன்று அதுவே  "அன்பு"

அன்புடன் மீண்டும் சந்திப்போம்.. சிந்திப்போம் உயர்வையே...!                           
                                
                                 

பதிவுலகில் புதிய அறிமுகம்


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என்னை சுய அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

நான் கடந்த சில மாத காலமாக ஒரு பார்வையாளனாக பதிவுலக நண்பர்களின் படைப்புகளையும், கருத்துகளையும் , எண்ண உருவாக்க உணர்ச்சிகளையும் கண்டு ரசித்து இருக்கிறேன், வியந்தும் இருக்கிறேன்.

நண்பர்கள் அனைவருமே, தங்களது எண்ண சிதறல்களை மிக தெளிவாகவும், அதே சமயத்தில் தான் கொண்டு இருக்கும் கருத்துகளின் வலிமையை எப்போதும், எதற்கும் விட்டு கொடுக்காத வண்ணம் இருக்கின்றனர். மிக்க மகிழ்ச்சி.

அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக பதிவு உலகத்தின் விரும்பதகாத தனி பட்ட கருத்துகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டு, தாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்ற  சுய நினைவு கூட  இல்லாமல் சேறுகளையும், கழிவுகளையும் ஒருவருக்கு ஒருவர் எரிந்து தங்களது சுய நிறத்தை இழந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நான் அறிமுக பதிவர் என்ற முறையிலும், அதை விட நெடுங்கால பார்வையாளன் என்ற முறையிலும் சொல்ல விரும்புவது, அனைவருக்கும் தெரியாத ஒன்று அல்ல.

எழுத்து என்னும் ஆயுதம் இவ்வுலகில் மிக வலிமையானது என்பதை அறியாதவர்கள் போல நடந்து கொள்கின்றனர்.
              
              "ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் 
               தீதுஉண்டோ மண்ணும் உயிர்க்கு." - குறள்

அனைவரும் கருத்துக்களால் விவாதம் செய்யலாமே ஒழிய தனிப்பட்ட விருப்பங்களையும், பழி வாங்குதலையும் எண்ணிக்கொண்டு தங்களுக்குள் குழுக்களாக அமைத்துக்கொண்டு புறங்கூறுதல் நல்லது அல்ல.
               
                "புறன் கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் 
                 அறங்கூறும் ஆக்கம் தரும். " - குறள் 

நாம் அனைவரும் தமிழர்கள், குணத்தால் , நிறத்தால், எண்ணத்தால் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நம் தமிழ் பண்பாடு சிறிதேனும் குறைவின்றி ஒருவருக்கு ஒருவர் அன்பு கொண்டு தமிழ் பதிவுலகில் கண்ணிய குறைவின்றி கருத்து யுத்தம் செய்வோம்.

பதிவுலகில் சா(தீ)யம் கூடாது. எப்போது சா(தீ)யம் நுழைகின்றதோ  அங்கே பொது கருத்துகளை பகிர்ந்திட முடியாது . தனிப்பட்ட சாயத்தை மட்டுமே பார்க்க முடியும். எழுத்து அனைவருக்கும் பொதுவான சொத்து என்பதை உணர்ந்து சாயம் பூசாதிருங்கள் . உலகம் முழுவதும் தமிழர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம் என்று நினைக்கும் சக புது பதிவர்.

அடுத்து வரும் பதிவுகளில் என்னுடைய பிற சிந்தனைகளை பகிர்ந்திட வருகிறேன்.


உங்கள் நண்பர்களில் ஒருவனாய் எண்ணி ஆதரவு தாருங்கள்.....!