Thursday, September 2, 2010

மலரும் நினைவுகள்



எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் என்ற நகரம்.
எங்கள் ஊரில் மிகவும் பிரசித்திபெற்ற பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரியும், சிவனும் ஒன்றே என்று உலகுக்கு காட்டியதாக சொல்லப்படும் கோயில் உள்ளது. ஆங்கிலயருக்கு எதிராக முதன்முதலாக போராட்டத்திற்கு குரல்கொடுத்த  பூலித்தேவன் பிறந்த நெற்கட்டும் செவல் என்ற ஊர் அருகில் தான் உள்ளது.  இன்னும் பல சிறப்புகள் கொண்டது தான். இங்கு ஆடி தபசு என்ற திருவிழா மிகவும் விமர்சையாக இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  

வீட்டில் இருந்து சுமார் மூன்று   கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்வோம். சில சமயங்களில் அண்ணனின் கருணையால்  சைக்கிள் கிடைக்கும் அப்போதெல்லாம் பள்ளி பருவ நண்பனை பின்னால் ஏற்றிக்கொண்டு    மகிழ்ச்சியோடு செல்வேன் .   மனதில் எந்த சலனமும் இல்லாத அந்த பருவத்தில் நடந்த, என்னை பாதித்த ஒரு நிகழ்ச்சி ...........

அப்போது எட்டாம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். எங்கள்  தமிழாசிரியர் பாடம் நடத்தும் விதம்  எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.   வழக்கம் போலவே தமிழாசிரியர்
திரு.கோவிந்தன் அவர்களின் கலகலப்பான போதனைகள் நிறைந்த வகுப்பு நடந்துகொண்டு இருந்தது (அவர் எங்களுக்கு பாடம்  நடத்தும் விதம, எப்போது தமிழ் வகுப்பு வரும் என்று எங்கள் எல்லாருக்கும்   ஒரு எதிர் பார்ப்பு இருக்கும் )    பாடம் நடத்திகொண்டிருக்கும்  நேரத்தில் தலைமையாசிரியர் அழைத்ததாக  பியூன் அண்ணன் தமிழ் ஆசிரியரிடம் தகவல் கூறி சென்றார்.  
                            
தமிழாசிரியரும் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி மேசை  மீது வைத்துவிட்டு தலைமையாசிரியரை பார்க்க  சென்றார். அந்த நேரத்தில் என் வகுப்பு சக நண்பன் ஒருவன் அவரது மூக்கு கண்ணாடியை எடுத்து ஒழித்து  வைத்துவிட்டான்.

சிறிதுநேரத்தில் தமிழாசிரியர் வந்து பாடம்  நடத்த ஆரம்பித்தார். பலகையில் ஏதோ  எழுதுவதற்காக தனது மூக்கு கண்ணாடியை தேடினார்,கண்ணாடி அங்கு இல்லை...  கண்ணாடியை மாணவர்களில் யாராவதுதான் எடுத்திருக்கவேண்டும் என்று நினைத்து   வகுப்பில் உள்ள அனைவரையும் எழுந்து நிற்க  செய்து, இன்னும்  ஐந்து  நிமிடங்களில் எடுத்தவர்கள் கொடுத்துவிடுங்கள் இல்லை என்றால் தக்க தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார். சக நண்பனை யாரும் காட்டிகொடுக்க முன்வரவில்லை .அவனும் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை.
      
  சிறிது நேரத்தில் தமிழாசிரியர் மூங்கில் பிரம்பை கையில் எடுத்து தன்னுடைய   இன்னொரு  கையில் ஓங்கி அடித்து தனக்கு தானே தன்டனை கொடுத்துகொண்டார் . அப்போதும் அந்த குறும்புகார தோழன் உண்மையை சொல்லவில்லை, கண்ணாடியை மறைத்தே விட்டான்............. 

மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றேன். நேரம் கரைந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த மாணவனை மட்டும் காணவில்லை ................... ?!

பள்ளி பருவ  நினைவுகள் தொடரும்... 

No comments: