Thursday, September 2, 2010

நினைவுகள் தொடருகிறது.....அன்று முழுவதும் என் நண்பன் பள்ளிக்கு வரவில்லை. மாலை பள்ளி முடிந்ததும், நேராக அவனது வீட்டுக்கு  சென்று பார்த்தேன். வீட்டில் அவனும் அவன்  அம்மாவும் இருந்தார்கள் . மெதுவாக  அவனிடம் சென்று பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டேன்,  அவன் உடனே அழ தொடங்கினான். பதில் ஏதும் சொல்லவில்லை 

அவனது அம்மா பேச தொடங்கினார்கள், " நேற்று மாலை வீட்டுக்கு வந்த உடன் அவனது அப்பா வீட்டு பாடத்தை  எழுதுவதற்கு நோட்டு புக்கை  எடுத்து வர சொன்னார்கள்  , அதை எடுத்த போது  அதனுடன் ஆசிரியரின் கண்ணாடியும் கீழே விழுந்தது. அதை பார்த்த அவனது அப்பா ' இது யாருது ' என்று கேட்டார். அதற்கு அவன் பயத்துடனும் இது தனது தமிழ் ஆசிரியருடையது என்றும் அதற்கு பின்னர் வகுப்பில் நடந்தவற்றையும்  சொல்லி இருக்கிறான் , அதை கேட்ட அவனது அப்பா அவனை அடித்தும், திட்டியும் இருக்கிறார். 

இந்த வயதிலேயே அதுவும் பாடம்  சொல்லித்தரும் ஆசிரியரிடமே திருட தொடங்கி விட்டாயே என்று  கோபத்தில் கத்தி, அவனை தனது சைக்கிளில் ஏற்றி கொண்டு அந்த இரவு நேரத்தில் ஆசிரியர் வீட்டுக்கு சென்றார். தனது தவறை ஒப்புகொள்ள செய்து அவரது கண்ணாடியையும் திருப்பி கொடுத்துவிட செய்தார். அப்பாவிடம் வாங்கிய அடியும், தன்னுடைய குற்ற உணர்வும் அவனை இரவு முழுவதும் புலம்ப செய்தது. இதனால் காய்ச்சல் வந்து பள்ளிக்கு வரவில்லை " என்று கூறி முடித்தார்கள்.

அந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், முக்கியமாக மாணவன் செய்த தவறுக்கு தனக்கு தண்டனை கொடுத்த அந்த ஆசிரியர் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். அதற்கு பின்னர் கூடிய அளவிற்கு யாரும் தவறு செய்யாமல் இருந்து கொண்டோம், அப்படியும் சிலர் செய்த தவறுகளையும்  நாங்கள்  காட்டி கொடுத்து விடுவோம். 
  
( பி.கு ) அந்த கண்ணாடியை எடுத்த என் நண்பன் இப்போது காவல் துறையில் பணிபுரிகிறார் !!

**************************************************************************************
'வெற்றி என்பது வேறு எங்கும் இல்லை, தோல்வியில்தான்'

தோல்வியே வெற்றியின் தாரக மந்திரம்.தோல்வியினால் வெறுப்படைந்தால் வாழ்கையில் முன்னேற முடியாது. எனவே தோல்வியை வெற்றியாக்குவதர்க்கு  என்ன வழி உண்டு என்பதை ஆராய்ந்து அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம்.

தோல்வி வந்து விட்டதே என்று துக்கபடுவதால் ஒரு பிரயோசனமும்  இல்லை. இன்று நாம் வெற்றி பெற்றவர்களாக போற்றப்படும் ஒவ்வொரு சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும்  ஆராய்ந்து பார்த்தால் பல முறை தோற்றவர்களாகவே காணபடுவர். தோல்வி பெற்ற ஒருத்தரால் மட்டுமே முழுமையான வெற்றியை பெற  முடியும்.

எனவே தோல்வியை நேசியுங்கள். வெற்றியும் தோல்வியும் ஒன்று போல் எடுத்துக்கொண்டால்  மட்டுமே வாழ்க்கையை ரசிக்க முடியும். துக்கம், பொறாமை , தோல்வி,  வேதனை, பழிவாங்குதல் அனைத்தையும் நம்  மனதில் இருந்து அகற்றிவிடுங்கள். அப்போது மனதில் தூய  வெளிச்சம் உண்டாகும்.

எப்போதும் எதிரிகளை நேசிக்க கற்றுகொள்ளுங்கள் அவர்கள்தான் நாம் முன்னேறுவதற்கு வழிகாட்டிகள். மகிழ்ச்சியும், புன்னகை புரியும் முகம்  மட்டுமே எதிரியை வீழ்த்தும் சிறந்த ஆயுதங்கள் . உங்களுடன் பணியாற்றும் சக தோழர்களை நேசியுங்கள் அவர்களை மனிதர்களாக மதியுங்கள் , தங்களை சுற்றி சந்தோசம் என்னும்  கோட்டையை கட்டுங்கள், யாராலும் அதை வீழ்த்த முடியாது.                              

தோல்வியை எதிர் கொள்ள நம்மிடம் இருக்க வேண்டியது தன்னம்பிக்கை.  என் வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொள்ள இந்த தன்னம்பிக்கை மட்டுமே எனக்கு கை கொடுத்தது , இன்றும் கை கொடுத்து கொண்டு இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வாசகங்களும் என்னை  மீண்டும் புதுபித்து கொள்ளவே.....இவை மறுபடியும் எனக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதை உணரமுடிகிறது.... இவை வெறும் வாசகங்கள் அல்ல , மனதை ஒழுங்கு படுத்தும் மந்திரங்கள்.  

மனம் ஒழுங்கற்று  இருப்பதால் தான் சிறு தோல்வி கூட பெரிய அளவில் மனதை பாதிக்கிறது.....எனவே " கவலைகளையும், தோல்விகளையும் ஒரு சிறு பையில் போட்டு வைத்து விடுங்கள், முக்கியமாக அந்த பையின் அடியில் ஓட்டை இருக்கட்டும் "
அன்புடன் மீண்டும் சந்திப்போம்......., சிந்திப்போம்.....

1 comment:

dheva said...

ஜோதி....

முதல் கருத்து ....எதையும் தீர்மானித்து விடுவதில் இருக்கும் அபத்தம் தெரிகிறது.

இரண்டவது ... வெற்றியின் விதைய அருமையாய் கருவாக்கியிருக்கிறீர்கள்...!

வாழ்த்துக்கள்!